கவுகாத்தி ஐ.ஐ.டியில் ஜப்பான் மாணவர் தற்கொலை

கவுகாத்தி ஐ.ஐ.டியில் பயின்று வந்த ஜப்பான் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
கவுகாத்தி ஐ.ஐ.டியில் ஜப்பான் மாணவர் தற்கொலை
Published on

திஸ்பூர்,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டியில், ஜப்பானைச் சேர்ந்த கோட்டா அனோடா என்ற 23 வயது மாணவர் படித்து வந்தார். ஜப்பானின் ஜிபு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான இவர், சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மூன்று மாத கால பயிற்சி படிப்பிற்காக கவுகாத்தி ஐ.ஐ.டியில் சேர்ந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த இவர் தனது பயிற்சி காலம் முடிவதையடுத்து வரும் 30 ஆம் தேதி ஜப்பான் திரும்புவதாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் இவர் தங்கியிருந்த விடுதி அறை வெகுநேரமாக உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் விடுதி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலமாக மாணவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com