

காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி வதோதராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியருக்கு வாட்ஸ் அப் மூலம் வந்த குறுஞ்செய்தியில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.
அந்த குறுஞ்செய்தி அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதில், ‘உங்கள் பள்ளி நாளை அழிக்கப்பட்டுவிடும். இறைவன் மிகப்பெரியவன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாலை 3.30 மணிக்கு அந்த குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது. அதை அந்த ஆசிரியர் காலை 8 மணிக்கு பார்த்துள்ளர்.
அந்த குறுஞ்செய்தி அடையாளம் தெரியாத புதிய எண்ணில் இருந்து வந்திருந்தது. இதனால் பதறிப்போன ஆசிரியர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும், திட்டமிட்டபடி தேர்வு நடைபெற்றது.
இதற்கிடையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக நேற்று, ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த எண், அதே பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருடையது என்பது தெரியவந்தது. அந்த மாணவர் விர்ச்சுவல் எண்ணை (Virtual Number) பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தேர்வு எழுத பயந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை விட்டு விடுவார்கள் என்று நினைத்து அந்த மாணவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.