ரீல்ஸுக்காக பாம்புடன் சாகசம்: விஷம் ஏறி இளைஞர் பலி

வழக்கம்போல, தான் பிடித்த அந்த நல்ல பாம்பை கையில் வைத்துக் கொண்டு தனது வீட்டின் வராண்டாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.
ரீல்ஸுக்காக பாம்புடன் சாகசம்: விஷம் ஏறி இளைஞர் பலி.
தபன் குமார் பிரதான்
Published on: 

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக, பிடிபட்ட நல்ல பாம்புடன் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் ஒருவர் நல்ல பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்புடன் ரீல்ஸ்

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் காந்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான் (வயது 28). பாம்புகளை பிடிப்பதில் அனுபவமிக்கவரான இவர், அப்பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். மேலும், அவர் அந்த பாம்புகளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

பாம்பு கடி

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அவர் ஒரு நல்ல பாம்பை பிடித்துள்ளார். இதையடுத்து வழக்கம்போல, தான் பிடித்த அந்த நல்ல பாம்பை கையில் வைத்துக் கொண்டு தனது வீட்டின் வராண்டாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்போது, அந்த பாம்பு திடீரென ஆக்ரோஷமடைந்து தபனின் விரல்கள், முழங்கை மற்றும் மேல் கை என அடுத்தடுத்து பல இடங்களில் கடித்தது.

அதீத நம்பிக்கை- அலட்சியம்

பாம்பு கடித்தவுடன் அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவியாக ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 10 நிமிடங்கள் கழித்து மற்றொரு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், தனக்கு பாம்புகளைக் கையாண்டு பழகியதால் எதுவும் ஆகாது என்ற அதீத நம்பிக்கையிலும், அலட்சியத்தினாலும் 2-வது ஊசியைப் போடாமல் பாதியிலேயே ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

வாலிபர் பலி

வீட்டிற்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அவரது உடலில் விஷம் ஏறி, உடல்நிலை மிக மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக பூரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மறுநாள் சனிக்கிழமை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் 'லைக்ஸ்' மற்றும் 'வியூஸ்' வாங்குவதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com