இந்தியாவுக்கு வந்து சேர்ந்த சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு

சுபான்ஷு சுக்லாவை வரவேற்பதற்காக அவருடைய மனைவி காம்னா சுக்லாவும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
Courtesy:  ANI
Courtesy:  ANI
Published on

புதுடெல்லி,

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில், சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். அவர்கள் 4 பேரும் விண்வெளியில் 18 நாட்கள் வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்களுடைய ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர். விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதனால், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெற்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுக்லாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது, சுக்லாவை வரவேற்பதற்காக வந்திருந்த அவருடைய மனைவி காம்னா சுக்லாவுக்கு மத்திய இணை மந்திரியும், டெல்லி முதல்-மந்திரியும் வாழ்த்து தெரிவித்தனர். விண்வெளி திட்டத்திற்காக, ஓராண்டாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட்டு விட்டு சென்றதற்காக வருத்தப்பட்டேன் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

எனினும், விண்வெளி திட்டத்திற்கு பின்னர் முதன்முறையாக இந்தியாவில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் எல்லோரையும் சந்திக்க இருப்பதற்காக உற்சாகத்துடனும் உள்ளார். அவருடைய இந்த விண்வெளி பயண திட்டத்தின் உதவியால், அடுத்து அவர் மேற்கொள்ளவுள்ள, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேவையான அனுபவம் கிடைக்கப்பெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com