

நேதாஜி மரணம்
இந்திய சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் ஒரு படையை தோற்றுவித்து போராடிய தன்னிகரற்ற வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 18-ந்தேதி பயணம் செய்த விமானம், தைபேயில் (தைவான்) விபத்துக்குள்ளானதில் பலியானார் என்று கூறப்படுகிறது.
இவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியபோதும், இவர் விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பலன் அளிக்காமல் 2 நாளில் (ஆகஸ்டு, 20-ந்தேதி) இறந்து விட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் நேதாஜி அந்த விபத்தில் சாகவில்லை, அவர் சோவியத் ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் இந்தியா திரும்பி துறவியாக வாழ்ந்து மறைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அஸ்தி
ஆனால் நேதாஜி உண்மையிலேயே அந்த விமான விபத்தில் மரணம் அடைந்து விட்டார், அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அஸ்தியானது டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது பேரனும், எழுத்தாளருமான ஆசிஷ் ரே குரல் கொடுத்து வந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்திக்கான சட்டப்பூர்வ உரிமை, ஜெர்மனியில் உள்ள அவரது மகள் அனிதா போசுக்குத்தான் உண்டு, அவர் அந்த அஸ்தியை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதற்கான பின்னணியும் இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.
கொண்டு வராதது ஏன்?
இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஆசாத் இந்து அரசின் 78-வது ஆண்டு விழா நடந்தது. இதில் ஆசிஷ் ரே பங்கேற்றுப்பேசியபோது நேதாஜி அஸ்தியைக் கொண்டு வராதததின் பின்னணி பற்றிய தகவலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, நேதாஜியின் அஸ்தியை கொண்டு வரும் விவகாரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட பலரைக்கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் நேதாஜியின் அஸ்தியைக் கொண்டு வந்தால், கொல்கத்தாவில் பெரும் கலவரங்கள் மூளும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்ததால் அது நடைபெறாமல் போய் விட்டது என கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய நேதாஜியின் மற்றொரு பேரனான பேராசிரியர் சுகதா போஸ், நேதாஜியின் மரணம் குறித்த அர்த்தமற்ற சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.