இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் - ராணுவ மந்திரிக்கு, ராகுல் காந்தி வற்புறுத்தல்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் வழங்கியதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ராணுவ மந்திரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வற்புறுத்தி உள்ளார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் - ராணுவ மந்திரிக்கு, ராகுல் காந்தி வற்புறுத்தல்
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதையும் குற்றம் சாட்டி வருகிறார்.

அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.) நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக தேர்வு செய்யப்படாததை கண்டித்து வரும் ராகுல் காந்தி, அரசு நிறுவனங்களை மோடி அரசு பலவீனப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

ஆனால் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கும் இந்த ரூ.1 லட்சம் கோடியில் ஒரு காசு கூட எங்களுக்கு வரவில்லை என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக இந்த நிறுவனம் முதல் முறையாக ரூ.1000 கோடி கடன் வாங்கியிருப்பதாகவும் ஊடகங்களில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது.

இதன் மூலம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கடன் வாங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், நீங்கள் ஒரு பொய்யை கூறினால், பின்னர் அதை மறைப்பதற்கு பல பொய்கள் கூற வேண்டியிருக்கும். ரபேல் விவகாரத்தில் பிரதமர் கூறிய பொய்யை மறைப்பதற்கு, நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி பொய்களை கூறியுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கியதற்கான ஆவணங்களை நாளை (இன்று) ராணுவ மந்திரி நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, தவறினால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், பொய் கூறும் ராணுவ மந்திரியின் பொய்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கியிருப்பதாக ராணுவ மந்திரி கூறியுள்ளார். ஆனால் ஒரு காசு கூட வரவில்லை என எச்.ஏ.எல். கூறுகிறது. ஏனென்றால் ஒரு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com