

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படும். அதன்படி நேற்று மாலை 5.19 மணியளவில் மார்கழி மாதம் பிறந்தது. அதன் காரணமாக கோவிலில் தினமும் நடந்து வந்த சுப்ரபாத சேவை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை ஒரு மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாலை 6.30 மணிக்குமேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.