

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5:22 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை கூடங்கள் உள்ள பிரிவில் முதலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு அருகில் உள்ளது. இந்த கட்டடத்தில் நோயாளிகள் யாரும் வைக்கப்படவில்லை. எனினும் தீப்பற்றிய இடத்திற்கு அருகே இருந்த நோயாளிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீயை அணைக்க 36 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன.
முன்னாள் நிதி-மந்திரி அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கார்டியோ நியூரோ மையத்தின் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், இந்தக் கட்டிடம் தீப்பற்றிய கட்டடத்தின் அருகில் இல்லை.
இந்த சம்பவம்குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், "தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைக்க முடிந்தவரை போராடி வருகிறார்கள். அனைவரும் அமைதி காக்க வேண்டும், தீயணைப்பு சேவை பணியாளர்களை தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.