திருமண விழாவில் திடீர் உடல்நலக்குறைவு... மணப்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்

திருமண நிகழ்வுகளை சற்று ஒத்திவைத்துவிட்டு பாதிக்கப்பட்ட இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளித்தார்.
திருமண விழாவில் திடீர் உடல்நலக்குறைவு... மணப்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
Published on

கண்ணூர்,

திருமண விழாவில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட பெண்களுக்கு, திருமண சடங்கை நிறுத்திவிட்டு மணப்பெண்ணே முதலுதவி செய்தார்.

திருமணம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனூரைச் சேர்ந்த டாக்டர் ஷிரின் சுபைருக்கும், டாக்டர் ரிஜாசுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண விழா சடங்குகள் ஒருபுறமும், விருந்து உபசரிப்பு ஒருபுறமும் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒருவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. மற்றொருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் வருவது மூர்ச்சையாகி சரிந்தார்.

மணக்கோலத்தில் முதலுதவி

அங்கிருந்த உறவினர்களுக்கு மணப்பெண் ஷிரின், டாக்டர் என்பதை அறிந்திருந்ததால் அவரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே மணக்கோலத்தில் இருந்த ஷிரின், திருமண நிகழ்வுகளை சற்று ஒத்திவைத்துவிட்டு பாதிக்கப்பட்ட இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளித்தார். மூக்கில் ரத்தம் வந்த பெண்ணை முன்னோக்கி சாய்ந்து அமரச் செய்து, மூக்கின் மென்மையான பகுதியை அழுத்திப் பிடித்து ரத்தம் வழிவதை நிறுத்த முயற்சித்தார். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படி பிடித்திருக்க அறிவுறுத்தினார். தலைசுற்றலால் பாதிக்கப்பட்ட பெண்ணை படுக்க வைத்து அவரது கால்களை உயர்த்தி வைத்திருக்க செய்து முதலுதவி அளித்தார். பின்னர் அவர்களை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினார். அந்த 2 பெண்களும் மணப்பெண் டாக்டர் ஷிரினுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதுநிலை மருத்துவம்

ஒட்டப்பாலம் வல்லுவநாடு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை மருத்துவத்தில் எம்.டி. முதலாமாண்டு படித்து வரும் ஷிரின், இதை சாதாரண கடமையாகவே செய்ததாக டி.வி. நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் மணந்து கொண்ட டாக்டர் ரிஜாஸ் எலும்பியல் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com