மும்பை விமான நிலையத்தில் திடீரென நடந்த பாதுகாப்பு ஒத்திகை; பயணிகள் பதற்றம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்ததுடன், கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மும்பை விமான நிலையத்தில் திடீரென நடந்த பாதுகாப்பு ஒத்திகை; பயணிகள் பதற்றம்
Published on

திடீரென புகுந்த வீரர்கள்

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நேற்று காலை திடீரென பாதுகாப்பு படை வீரர்களுடன் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் திபுதிபுவென உள்ளே புகுந்தனர். இதை கண்ட அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் பஸ் மூலம் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம்.அவ்வாறு 15 பஸ்களில் ஏற்றப்பட்ட பயணிகளை கட்டிடத்திற்குள் அழைத்து செல்லாமல் பஸ்களிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். மேலும் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்காக வந்த பயணிகளை கட்டிட அறைகளில் தங்க வைத்தனர்.

பதற்றமடைந்த பயணிகள்

இதனால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிபிதுங்கினர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்வுகளும் அவர்களது அடிமனதை துளைத்தது.இவ்வாறு பாதிக்கப்பட்ட பயணிகள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இங்கு என்ன நடக்கிறது?, நாங்கள் ஏன் வெளியேற்றப்படுகிறோம்?, பஸ்சுக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள், கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்கிறது, பலர் விமானங்களை தவற விட்டு விடுவார்கள் என்றெல்லாம் பதிவிட்டு வறுத்தெடுத்தனர்.இதைத் தொடர்ந்து, இது வெறும் பாதுகாப்பு ஒத்திகை தான். யாரும் பயப்பட வேண்டாம் என்று விமான நிலைய அதிகாரிகள் வலைதளங்கள் மூலம் பதிலளித்தனர். இந்த பதிலை பார்த்த பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பதற்றம் தணிந்தது. ஆனால் விமான நிலையத்தில் பெரும் சிரமத்தை சந்தித்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

2 மணி நேரம்

இதற்கிடையே சுமார் 2 மணி நேரம் நடந்த பாதுகாப்பு ஒத்திகை காலை 11.48 மணி அளவில் நிறைவு பெற்றதாகவும், இந்த ஒத்திகை மூலம் விமான நிலையம் பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக விமான போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com