டெல்லியில் போலீசார் ‘திடீர்’ போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு

தாக்குதல் நடத்திய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் திடீரென திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் போலீசார் ‘திடீர்’ போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் திஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி கைதிகளை ஏற்றிவந்த சிறை வாகனம் மீது வக்கீல் ஒருவரின் கார் மோதியது.

காரில் வந்த வக்கீலை போலீசார் சிறை பிடித்து தாக்கியதைத் தொடர்ந்து, வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்துகிற அளவுக்கு நிலைமை மோசமானது. இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்தனர். 14 மோட்டார் சைக்கிள்களும், போலீஸ் கார் ஒன்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 8 சிறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கோர்ட்டு வளாகம், குருஷேத்திர களம் போல மாறியது.

இந்த மோதல் தொடர்பாக ஒரு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மறுநாளில் இந்த மோதல்பற்றி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து அவசர விசாரணை நடத்தியது. ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.பி. கார்க் தலைமையிலான நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிறப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் சிங், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரிந்தர் சிங் ஆகியோரை இடமாற்றம் செய்யவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வக்கீல்கள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் ஐகோர்ட்டு கூறியது.

இந்த உத்தரவுகள் போலீஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது.

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) டெல்லி சாகெட் மாவட்ட கோர்ட்டுக்கு வெளியே சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரரை வக்கீல் கள் கடுமையாக தாக்கினர். அவர் தப்பித்தோம் பிழைத்தோம் என மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. போலீஸ்காரரை தாக்கிய வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பாக நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென ஆயிரக்கணக்கான போலீசார் கைகளில் பதாகைகள், கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளுடன் அணி அணியாக திரளத்தொடங்கினர்.

அந்த பகுதியில் அமைந்த முக்கிய சாலையை அவர்கள் முடக்கினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருந்த போலீசார், நாங்கள் போலீஸ் சீருடையில் உள்ள மனிதர்கள், நாங்கள் குத்துகள் வாங்கும் பைகள் அல்ல; பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவை, தாக்குதல் நடத்திய வக்கீல்கள் மீது நடவடிக்கை தேவை என முழங்கினர்.

மாலையில் இந்தியா கேட் அருகே போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் திரண்டு வந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

சீருடை அணிந்த போலீசார் போராட்டம் நடத்துவதற்கு பணி விதிகள் தடை விதித்துள்ள நிலையில், போலீசார் நடத்திய போராட்டம் அனைத்து தரப்பிலும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.

1988-ம் ஆண்டு இதே போன்று டெல்லியில் போலீஸ், வக்கீல்கள் மோதல் ஏற்பட்டபோது தங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட கிரண் பெடியின் படத்தை ஏந்திய போலீசார், நமது போலீஸ் கமிஷனர் கிரண் பெடி போல நடந்து கொள்ள வேண்டும் என்று கோஷமிட்டனர்.

சிறப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் சிங், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரிந்தர் சிங் ஆகியோரை இடமாற்றம் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முழங்கினர்.

போலீஸ் பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்றும் அவர் கள் குரல் கொடுத்தனர்.

போராட்டம் நடத்திய போலீசார் மத்தியில் மாநகர போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் பேசினார்.

போலீசாரின் கவலைகள் கவனிக்கப்படும்; பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். நாம் ஒழுக்கமான படையாக இருக்க வேண்டும். நாம் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும். அரசும், மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டெல்லி போலீசாருக்கு அரியானா, பீகார் உள்ளிட்ட பல மாநில போலீசார் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

டெல்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிற நிலையில், போலீஸ் போராட்டம் பற்றி டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால் தனது இல்லத்தில் அவசர கூட்டம் ஒன்றை நடத்தி நிலைமையை ஆய்வு செய்தார்.

இதற்கிடையே வக்கீல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பிறப்பித்த உத்தரவு, அவர்களை கைது செய்யவும் தடையாக அமையுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, மாலை 7.30 மணிக்கு போலீசாரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் 10 மணி நேரம் நீடித்தது. இது மிக மிக அபூர்வமான நிகழ்வாக பதிவாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com