

இந்தூர்,
கடந்த ஆண்டு ஜூலை மாதவாக்கில் சுல்லி டீல்ஸ் என்ற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், இவ்வழக்கு தொடர்பாக மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஓம்காரேஷ்வர் தாக்குர் (வயது 26) என்ற வாலிபரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த வாலிபர் பி.சி.ஏ. பட்டதாரி ஆவார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு குரூப்பில் இணைந்ததாகவும், அதில் முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் யோசனை பகிரப்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில், சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியதாகவும், அதில் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததாகவும் அவர் கூறினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவர் ஆவார்.
சமீபத்தில் இதேபோன்ற புல்லி பாய் என்ற செயலியை உருவாக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த நீரஜ் பிஷ்னோய் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.