சுனந்தா வழக்கு: டெல்லி போலீஸ், சுப்ரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சுனந்தா புஷ்கர் வழக்கில் டெல்லி போலீஸ், சுப்ரமணியன் சுவாமி ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுனந்தா வழக்கு: டெல்லி போலீஸ், சுப்ரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர்,டெல்லியில் உள்ள ஹோட்டலில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ தலைமையில் புலனாய்வு அமைப்பு, உளவுத் துறை, அமலாக்கத் துறை, டெல்லி காவல்துறை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 6-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகியோரது மகன் சிவ் மேனன், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எஸ்ஐடி விசாரணை கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவ் மேனன், தனது தாயார் மரணம் தொடர்பாக கேள்வியெழுப்ப அவருக்கு உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை விவரங்களை சமூகவலை தளங்களில் பகிரவும், ஊடகத்திடம் தெரிவிக்கவும், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், தனது தாயார் சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் நடத்தி முடிக்கும்படி, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சிவ் மேனன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.எஸ். சிஸ்தானி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி மற்றும் டெல்லி காவல்துறை ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. முன்னதாக கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கின் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com