

புதுடெல்லி,
பிருந்தா கரத் ஆதரவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத், கணவன்மார்களின் சொத்துதான் பெண்கள் என்று கருதும் காலனி ஆதிக்க சட்டத்தை நீக்கியதை வரவேற்கிறேன். அதே சமயத்தில், கணவனின் கள்ள உறவால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ், கோர்ட்டை அணுகி இழப்பீடு பெற வழிவகை உள்ளது என்று கூறினார்.
மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், பழங்கால சட்டத்தை ரத்து செய்த நல்ல தீர்ப்பு. தகாத உறவு, விவாகரத்துக்கு காரணம் ஆகலாம், ஆனால், குற்றம் அல்ல என்று கூறியுள்ளார்.
மகளிர் காங்கிரஸ்
மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் எம்.பி., இது சிறப்பான முடிவு. பெண்களை சமமாக நடத்தாத சட்டம் நீக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, ஆங்கிலேயர்களே நீண்ட காலத்துக்கு முன்பு கைவிட்ட ஆங்கிலேயர் கால சட்டத்தை நாம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தோம். இதை முன்பே நீக்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஆர்வலர் ரஞ்சனா குமாரி, மூத்த வக்கீல் ரெபேக்கா ஜான், வக்கீல்கள் ஐஸ்வர்யா பாதி, மேனகா குருசாமி ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
பெண் வக்கீல்கள்
சுப்ரீம் கோர்ட்டு மூத்த பெண் வக்கீல் ரெபேக்கா ஜான், 497-வது பிரிவை 50 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கி இருக்க வேண்டும். நவீன கால தண்டனை சட்டத்தில் அது இருந்திருக்கவே கூடாது. ஏனென்றால், அது வழக்கொழிந்த சட்டம். இது, மிகவும் காலதாமதம் என்றாலும், வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
பெண் வக்கீல் ஐஸ்வர்யா பாதி, பெண் என்பவள், கணவனின் சொத்து என்று கருதப்பட்ட காலத்தில் இருந்த இந்த சட்டம், நீக்கப்பட வேண்டியதுதான் என்று கூறினார்.
மற்றொரு பெண் வக்கீல் மேனகா குருசாமி, ஆண்- பெண் சமத்துவம் தொடர்பான நல்ல முடிவு என்று கூறினார்.
ரேணுகா சவுத்ரி எதிர்ப்பு
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு உதவும் என்பதை கோர்ட்டுதான் தெளிவுபடுத்த வேண்டும். ஆண்கள் எளிதாக பெண்களை கைவிடவோ, பல பெண்களை மணக்கவோ வழிவகை செய்யும். இது, பெண்களுக்கு தீங்காக அமையும் என்றார்.
டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், இது, பெண்களுக்கு எதிரான தீர்ப்பு. திருமண பந்தத்தில் இருந்து கொண்டே தகாத உறவில் ஈடுபட நாட்டு மக்களுக்கு இத்தீர்ப்பு பகிரங்கமாக பொது உரிமம் அளிக்கிறது. தகாத உறவில் ஆண், பெண் யார் ஈடுபட்டாலும் குற்றம் என்று ஆக்குவதற்கு பதிலாக, ஒட்டுமொத்தமாக அதை குற்றம் அல்ல என்று ஆக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் பிருந்தா அடிகே, இந்த தீர்ப்பு, பலதார மணத்தை ஆதரிக்கிறதா? ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டு கைவிடுகிறார்கள். தகாத உறவு குற்றம் அல்ல என்றால், அப்பெண்கள் எப்படி கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும்? என்று கூறியுள்ளார்.