முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை (டூல்கிட்), பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி (வயது 22), சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். சூழலியல் ஆர்வலரான அவர், ஒரு போராட்டக்குழு சார்பில் இதனை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பெங்களூரு வந்த டெல்லி போலீசார், திஷா ரவியை கைது செய்தனர். வன்முறையை தூண்டிவிடுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அத்துடன், பிரைடே பார் பியூச்சர் என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், கிரேட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன் தனது வழக்கில் தானே வாதாட உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 21-வயதான திஷா ரவி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com