பாலியல் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

இந்த வழக்கு விதிவிலக்கான வழக்கு என்பதால் மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாலியல் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Published on

புதுடெல்லி:

மராட்டிய மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனையை அணுகினர். அப்போது, சிறுமியின் வயிற்றில் வளரும் கரு கிட்டத்தட்ட 30 வாரம் வளர்ச்சி அடைந்திருந்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, கருவை கலைக்கக்கூடிய கால வரம்பை கடந்துவிட்டதால் கருக்கலைப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிறுமியை கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சிறுமியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி முறையிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, கருவை கலைக்க முடியுமா? அவ்வாறு செய்தால் சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி மும்பை சியோன் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கு விதிவிலக்கான வழக்கு என்பதால் மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிப்பதாக தெரிவித்தனர். சிறுமிக்கு இந்த நிலையில் கருக்கலைப்பு செய்வதில் சில ஆபத்துகள் இருந்தாலும், பிரசவ கால அபாயத்தை விட உயிருக்கு ஆபத்து அதிகம் இல்லை என்று மருத்துவ வாரியம் தெரிவித்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மருத்துவக் கருக்கலைப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ், திருமணமான பெண்கள், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுமிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பெண்கள் 24 வாரங்கள் வரை உள்ள கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com