

காஷ்மீர் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சித்தலைவருமான உமர் அப்துல்லா கடந்த 1994-ம் ஆண்டு பாயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து மனு ஒன்றை உமர் அப்துல்லா தாக்கல் செய்தார். பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதால் வலியும், துன்புறுத்தலும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக்கூறி குடும்ப நல கோர்ட்டு, அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ம் ஆண்டு தள் ளுபடி செய்தது.
பின்னர் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2023-ம் ஆண்டு தள்ளுபடி செய்து, விவாகரத்து வழங்க மறுத்தது.எனவே உமர் அப்துல்லா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கக்கோரி 2 மனுக்களை தாக்கல் செய்தார்.சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் நரசிம்மா, அலோக் அராதே அமர்வு முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.அப்போது உமர் அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சி பல், தம்பதியர் இருவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது எனக்கூறினார்.
மேலும், 'அவர்கள் சுதந்திரமாக வாழவும் முடிவு செய்துள்ளனர். எல்லாம் முடிவாகிவிட்டது. எனவே அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம்' எனவும் தெரிவித்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உமர் அப்துல்லாவின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க ஒப்புக்கொண்டனர்.'நாங்கள் அதை எங்கள் உத்தரவின் ஒரு பகுதியாக ஆக்கி, அதற்கேற்ப அதை முடித்து வைப்போம்' என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.