பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கேள்வி


பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கேள்வி
x

பட்டாசு உற்பத்தியாளர்களுக்காக ஆஜரான வக்கீல், அனுமதிக்கப்பட்ட ரசாயன கலவைகளை நீரி பரிந்துரைக்க வேண்டும் என்றார்

புதுடெல்லி,

காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் பட்டாசு வெடிக்க தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ஆஜரான மூத்த வக்கீல் ஒருவர், டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குளிர் காலத்தில் அவர்கள் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள் என்றார்.அப்போது கோர்ட்டு சட்ட ஆலோசகரான மூத்த வக்கீல் அபராஜிதா சிங், டெல்லியில் உள்ள உயர்குடி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். மாசுபாடு ஏற்படும் காலங்களில் அவர்கள் டெல்லியை விட்டு வெளியேறிவிடுகிறார்கள் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், நாட்டை தலைநகர் பகுதியில் உள்ள மக்கள் மட்டும் நல்ல காற்றை பெறும் உரிமையை பெற்று இருந்தால், மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு அந்த உரிமை ஏன் இல்லை. டெல்லிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது ஏன். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் நாடு முழுவதிலும் ஏன் தடை விதிக்கக்கூடாது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், நான் கடந்த குளிர்காலத்தில் அமிர்தசரஸில் இருந்தேன், அங்குள்ள மாசுபாடு டெல்லியை விட மோசமாக இருந்தது. பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுவதும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் இருந்து விரிவான அறிக்கையை பெற மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.அப்போது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) மாசுபாட்டைக் குறைக்க ‘பசுமை பட்டாசுகளின்’ சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சட்ட அதிகாரி கூறினார். பட்டாசு உற்பத்தியாளர்களுக்காக ஆஜரான வக்கீல், அனுமதிக்கப்பட்ட ரசாயன கலவைகளை நீரி பரிந்துரைக்க வேண்டும் என்றார்.இதையடுத்து பட்டாசு உரிமங்களை அதிகாரிகள் ரத்து செய்வது தொடர்பாக தற்போதைய நிலை இருக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story