

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் அந்தஸ்து கோரி டெல்லியை சேர்ந்த வக்கீல் ஒருவர் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான் பூச்சி என்றும் ஒட்டுண்ணி என்றும் விமர்சித்ததாக செய்திகள் பரவின.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விசாரணையின் போது வாய்மொழியாக சொன்னவற்றை சிலர் தவறாக திரித்து வெளியிட்டது கவலை அளிக்கிறது. போலி சான்றிதழ்கள் மூலம் சட்டம் உள்ளிட்ட துறைகளில் நுழைந்தவர்களைத்தான் விமர்சித்தேன். அதேபோன்ற நபர்கள் தான் ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள், மற்ற துறைகளிலும் உள்ளனர். அவர்கள் ஒட்டுண்ணி போன்றவர்கள். இதை வைத்து நாட்டின் இளைஞர்கள் அனைவரையும் விமர்சித்தேன் என்று கூறுவது ஆதாரமற்றது.
தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியர்களும் உத்வேகம் அளிக்கிறார்கள். நமது நிகழ்காலமும், எதிர்காலமும் அவர்களை நம்பியே இருக்கிறது. அவர்களை வாழ்த்துவதில் பெருமையாக உள்ளது. வளர்ந்த இந்தியாவின் தூண்களாக அவர்களை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.