

புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து தேசம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை அதிகளவில் தங்களது படைகளை பயன்படுத்தியத குற்றச்சாட்டு குறித்த பல்வேறு மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:- அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.
தீவிர போராட்டம் நடக்கிறது என்பதற்காக காவல்துறையின் வரம்பு மீறிய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறினால் அது சார்ந்து நடவடிக்கை, விசாரணை மேற்கொள்ளலாம். ஜனநாயக செயல்பாட்டில் ஒழுக்கம் என்பது முக்கியமான அங்கம். போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் நடந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம்.
காவலர்கள் உள்பட அனைவரின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். போராட்டத்தை காவலர்கள் கையாள்வது தொடர்பாக தேசிய அளவில் வழிபாட்டுதல்கள் தேவை என்று கூறினார். தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.