அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு

அமைச்சராக பதவி தொடரும் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு, "இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை. இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்குங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் அமர்வு, "அவகாசம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்? ஆனால் அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும் கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை, அதற்காக நீங்கள் அதனை அனுகூலமாக எடுத்துக்கொள்வீர்களா?. இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது" என்று கூறியது.

இதனைத்தொடர்ந்து 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com