பொதுவெளியில் ஆபாச படம் பார்ப்பதற்கு தடை கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

ஒவ்வொரு விநாடியும் 5,000 ஆபாச இணையதளங்கள் பார்க்கப்படுகின்றன.
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

பொது இடங்களில் ஆபாச படங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கும் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பொது இடங்களில் ஆபாச படங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கும் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர் பி.எல். ஜெயின் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதை கட்டுப்படுத்தவும், பொது இடங்களில் ஆபாச படங்களை பார்ப்பதை தடை செய்யவும் தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆபாச வீடியோக்கள்

மேலும், “இணையவழி ஆபாச படங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. ஒவ்வொரு விநாடியும் 5,000 ஆபாச இணையதளங்கள் பார்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இணையம் வழியே வெளியிடப்படுகின்றன. பரவலான இணைய பயன்பாடு ஆபாச தளங்களை எளிதாக கிடைக்கும் விதத்தில் மாற்றியுள்ளது. இது அதிகப்படியான நுகர்வு மற்றும் அடிமையாதலுக்கு வழிவகுக்கிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-இன் பிரிவு 69A-இன் கீழ், எந்தவொரு கணினியின் மூலமாகவும் தகவல்களை பொது மக்கள் அணுகுவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு தள்ளுபடி

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் முறையான கோரிக்கை வைக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. "இந்த விவகாரம் எவ்வித ஐயமுமின்றி எழுப்பப்பட்டது மிக முக்கியமானது. ஆனால், இது நீதிமன்றத்தின் ஆய்வுக்கு தேவைப்படும் சட்டரீதியான கேள்விகளை இது உள்ளடக்கவில்லை. மேலும், இது தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிபுணர்களின் பரிசீலனை தேவைப்படும் கொள்கை சார்ந்த விவகாரமாகும். இந்த விவகாரம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றது," என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com