

புதுடெல்லி,
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குனராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
இப்படத்தின் தமிழ்நாட்டு வினியோக உரிமையும், லாபத்தில் 12 சதவீதமும் ஆட் பீரோ நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உரிய தொகையை முழுமையாக வழங்காததால் லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ஆகியோருக்கு எதிராக பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை ஏற்று கர்நாடக ஐகோர்ட்டு இந்த வழக்கை ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து ஆட் பீரோ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 16-ந்தேதி நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான விசாரணை 12 வாரங்களுக்கு நிலுவையில் வைக்கப்படும். அதற்குள் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மனுதாரருக்கு உரிய தொகையை வட்டியுடன் செலுத்தாவிட்டால் உத்தரவாதம் அளித்தவர் என்ற முறையில் லதா ரஜினிகாந்த் அந்த தொகையை வட்டியுடன் மனுதாரருக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் தரப்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில், லதா ரஜினிகாந்த் தரப்பில் நாங்கள் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பது தான் இந்த வழக்கின் அடிப்படை வாதமாக அமைந்துள்ளது. எனவே, ஆட் பீரோ நிறுவனம் நாங்கள் தரவேண்டிய மொத்த தொகையை கணக்கிட்டு தற்போது நிலுவையில் உள்ள தொகையை குறிப்பிட வேண்டும் என்றார்.
இதற்கு நீதிபதிகள், தொகை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் நீங்கள் சென்ற முறை அளித்த உத்தரவாதம் என்ன ஆனது? நீங்கள் உத்தரவாதம் அளித்து 3 மாதங்கள் கடந்துவிட்டன. இதுகுறித்து உங்கள் தரப்பு நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு முன்பு வாதாடிய வக்கீல் லதா ரஜினிகாந்த் ஒப்புதல் பெறாமல் இந்த உத்தரவாதத்தை அளித்து இருக்கிறார் என்று பதில் கூறப்பட்டது.
இப்படி எல்லாம் கோர்ட்டுடன் விளையாட முடியாது என்று எச்சரித்த நீதிபதிகள் உங்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் கோர்ட்டு இதனை நிலுவையில் வைத்திருந்தது. இப்போது இந்த வழக்கை அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்கள்.
தொடர்ந்து, வருகிற 10-ந்தேதி உங்களால் உத்தரவாதம் அளித்தபடி தொகையை செலுத்த முடியுமா? முடியாதா? என்பது பற்றி கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். அன்றே லதா ரஜினிகாந்த் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை தொடருவது குறித்து கோர்ட்டு இறுதி முடிவை எடுக்கும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.