மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்களும், பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார்.

22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பதிலளிக்குமாறு கமல்நாத், மத்திய பிரதேச சபாநாயகர், முதன்மை செயலாளர் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதேபோன்று, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வர விரும்பினால், அவர்களுக்கு கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச டி.ஜி.பி.க்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய பிரதேச அரசு தோல்வி அடையும் என பா.ஜ.க. முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ஜீத்து பத்வாரி கூறும்பொழுது, நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். இதனை முதல் மந்திரியே கூறியுள்ளார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வரவேண்டும் என்பது அவசியம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு சட்டசபை கீழ்படிய வேண்டும். நாங்கள் உறுதியாகவும், தயாராகவும் இருக்கிறோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com