தேவேந்திர பட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மராட்டிய சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் எம்.எல்.ஏக்கள் பதவியேற்க வேண்டும் எனவும், இடைக்கால சபாநாயகரையும் தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்?

மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்து ஆனது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் கெடு விதித்தார்.

ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்ட சபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com