நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் வெளியேறுவதை தடுத்து நிறுத்துவது தற்போதைய மிக அவசியமான தேவையாகும்.
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

நீதிபதிகள் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

7 மாநிலங்கள் சம்மதம்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயது 65 ஆகவும், ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. அதுபோல், நாடு முழுவதும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

சத்தீஷ்கார், கர்நாடகா, மத்தியபிரதேசம், மராட்டியம், சிக்கிம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்க்க சம்மதம் தெரிவித்துள்ளன.

அந்த மாநிலங்கள், சர்வீஸ் விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். அந்த நீதிபதிகள் 60 வயதை பூர்த்தி செய்யும்போது, சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகள் அவர்களின் செயல் திறனை ஆய்வு செய்வதை பொறுத்து, அவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு அளிக்கலாம். இந்த திருத்தங்களை கூடிய விரைவில் 2 மாதங்களுக்குள் செய்ய வேண்டும். விதிகள் திருத்தப்படும் வரை, மேற்கண்ட 7 மாநிலங்களில் 60 வயது பூர்த்தி அடைந்த நீதித்துறை அதிகாரிகள், அவர்களின் செயல்திறனை ஐகோர்ட்டு ஆய்வு செய்வதை பொறுத்து, அவர்கள் 62 வயது வரை ஓய்வு பெறக்கூடாது. நடப்பாண்டு மார்ச் 31-ந் தேதி அல்லது அதற்கு பிறகு எந்த நீதித்துறை அதிகாரியாவது ஓய்வு பெற்றிருந்தால், அவர்களுக்கு வேறு பணி கிடைக்காதபட்சத்தில், அவர்கள் மீண்டும் நீதித்துறை பணியில் சேர வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அனுபவம் வாய்ந்த நீதிபதிகள்

மேலும், ஆந்திரா, கேரளம், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங் கள், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2 வாரங்களுக்குள் அவர்கள் முடிவு எடுத்து, கோர்ட்டில் கீழ்ப்படிதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நீதித்துறையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கும், தற்போது பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கும், காலியிடங்களால் நீதி கிடைப்பது வெறும் கனவாகி விடாமல் தடுப்பதற்கும், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் வெளியேறுவதை தடுத்து நிறுத்துவது தற்போதைய மிக அவசியமான தேவையாகும்.

மறுபரிசீலனை

மாவட்ட நீதித்துறையினரின் பணி நிலைமைகள், ஐகோர்ட்டு மற்றும் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் வகுக்கப்படும் விதிகளால் நிர்வகிக்கப்படுவதால், அங்கு பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர் பான விவகாரத்தை ஐகோர்ட்டுகளும், மாநில அரசுகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் இந்த உணர்வுடன் கேட்டுக்கொள்கிறோம். திறமையற்ற அல்லது செயலற்ற அதிகாரிகளை நீக்கிவிட்டு, நேர்மை மற்றும் திறமை நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளை மட்டுமே பணியில் தொடர அனுமதிக்கும் வகையில், நீதித்துறை பணிகளை மதிப்பிடுவதை ஒரு முன்நிபந்தனையாக சில ஐகோர்ட்டுகள் விவேகத்துடன் இணைத்துள்ளன. அனுபவம் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை தக்கவைப்பதற்கும், அதே வேளையில் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்கும் இளம் அதிகாரிகளின் வருகையை தடுக்கும் செயலற்ற அதிகாரிகளை அகற்றுவதற்கும் இடையே ஒரு சமநிலையை இந்த ஆலோசனை ஏற்படுத்துவதால், இது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com