

டெல்லி,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய தவெக அரசும், கடந்த திமுக அரசின் நிலைப்பாடான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அந்த வகையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கார்த்திகை தீபத்திருநாளான நவம்பர் 24ம் தேதி ஒருநாள் மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், கடந்த திமுக அரசு போலவே தற்போதைய தவெக அரசும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தீபத்தூணில் தவெக அரசு தீபம் ஏற்றவில்லை.
இதற்கு முருக பக்தர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்புகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்யவில்லை என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. அறங்காவலர் குழுவின் அறிக்கையை காட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் போனது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.
சீராய்வு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசின் தந்திர போக்கை காட்டுவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மத்திய தொல்லியல்துறையினர் தீபத்தூணை ஆய்வு செய்ய தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்ற மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை என கோவில் அறங்காவல் அலுவலர்கள் கூறினர் என்று மத்திய தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.