அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாடா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுமாறு கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால், கடந்த ஆகஸ்டு 6-ந் தேதியில் இருந்து அரசியல் சட்ட அமர்வு தினந்தோறும் விசாரணை நடத்தியது. கடந்த 16-ந் தேதி விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுவதால், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் இந்து தரப்பான ராம் லல்லாவின் வக்கீல் கடந்த சனிக்கிழமை தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார்.

அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். ராமர் பிறந்த இடம் என்பது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. நிர்மோகி அகாடா தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் தரப்பின் வக்கீல், நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது, வழக்கின் நிவாரணம் தொடர்பாக தங்களது எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய அவருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இதற்கிடையே, முஸ்லிம் தரப்பு வக்கீல் ராஜீவ் தவான் தயாரித்த எழுத்துப்பூர்வ கருத்துகள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த கருத்துகள், பத்திரிகைகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த வழக்கில் அரசியல் சட்ட அமர்வு அளிக்கும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும், அது வருங்கால சந்ததி மீது தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் பின்விளைவுகளை உண்டாக்கும்.

அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்த நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, இவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இந்த விளைவுகளை கோர்ட்டு மனதில் கொள்ள வேண்டும். அரசியல் சட்ட மாண்புகள் பிரதிபலிக்கும் வகையில், நிவாரணம் உருவாக்கப்பட வேண்டும்.

தீர்வை உருவாக்குவதில், நமது நாட்டின் பல மதங்கள், பல கலாசாரங்கள் கொண்ட பண்பாடுகள் கட்டிக்காக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிவாரணம் வழங்குவது இந்த கோர்ட்டின் பொறுப்பு. நிவாரணம் வழங்கும்போது, நமது வருங்கால சந்ததிகள் இந்த தீர்ப்பை எப்படி பார்ப்பார்கள் என்பதை நீதிபதிகள் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com