ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை: மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயது சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்குச் உணவுப் பொருட்களைக் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தவழக்கில் தனது ஆடைகளைக் களைய முயன்ற அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சதீசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், ஐபிசி 354-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா கடந்த 19-ம் தேதி குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த நபரைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார்.

தனது தீர்ப்பில் 12 வயதுச் சிறுமியின் ஆடைகளைக் களையாமல், அந்தச் சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது. இது போக்சோ சட்டத்திலும் வராது. ஐபிசி 354-வது பிரிவில் மட்டுமே வரும். அதற்குக் குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை மட்டுமே வழங்கலாம்.

12 வயதுச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் அந்த செயலில் ஈடுபட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்தாலும் அது பாலியல் வன்கொடுமையில் வராது. பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, உடலோடு உடல் தொடர்பு கொள்வதுதான். ஆதலால் அந்தச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் தொட்டதால் அது பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. ஆதலால், அந்த நபரை விடுவிக்கிறேன். அவர் ஏற்கெனவே போதுமான அளவு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தார்.

நாக்பூர் அமர்வு அளித்த இந்த தீர்ப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. இதற்கு சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com