மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

திருச்சியை சேர்ந்த ஏ.ஜோனிஸ்ராஜின் தந்தை ஜெ. ஆரோக்கியசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சமத்துவம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கும் எதிராகவும் உள்ளது. எனவே இந்த சட்டத்தை அரசமைப்பு சட்டதுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதுபோல, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜி.டி.ராஜஸ்ரீ திகல்யா சார்பில் அவரது தாயார் கீதா கோவிந்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், 11-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு 12-ம் வகுப்பு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 இடஒதுக்கீடு பெறுவதற்கு உரிமை இல்லை என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஐகோர்ட்டில் ஏன் வழக்கு தொடரவில்லை என வினவினர். ஏ.ஜோனிஸ்ராஜின் சார்பில் வக்கீல் ஏ.வேலன் ஆஜராகி மனுவில் தெரிவிக்கப்பட்டதை குறிப்பிட்டு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ரிட் மனு தொடர்பாக ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி, மனுவை திரும்ப பெறவும் அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.

ஜி.டி.ராஜஸ்ரீ திகல்யா சார்பில் ஆஜரான வக்கீல் ஆனந்த் நந்தகுமார், மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டது குறித்து வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், மருத்துவ படிப்பில் சேர வகை செய்யும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மாறாக சலுகை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு, 12-ம் வகுப்பு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு உரிமை இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com