ஜோஷிமத் நகரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நாட்டின் அனைத்து முக்கிய விவகாரங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜோஷிமத் நகரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது.

இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. இதையடுத்து ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஜோஷிமத் நகர விவகாரத்தை தேசிய பேரிடராக அறிவித்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இயற்கையை பாதிக்கும் தேசிய மேம்பாட்டுப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வரும் 16-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். மேலும் நாட்டின் அனைத்து முக்கிய விவகாரங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவற்றை கவனிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com