

புதுடெல்லி,
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் தவணையுரிமை காலத்தை நீட்டிக்கும் புதிய திட்டத்தை அறிவிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் விஷால் திவாரி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
அப்போது மனுதாரர் விஷால் திவாரி ஆஜராகி வாதிடுகையில், கொரோனா 2-வது அலை பாதிப்பால் நாட்டில் சுமார் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். எனவே இந்த 2-வது அலை காலத்தில், வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் தவணையுரிமை காலத்தை நீட்டிக்கும் புதிய திட்டத்தை அறிவிக்க உத்தரவிட வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 5-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கை போதுமானதாக இல்லை என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் தவணையுரிமை காலத்தை நீட்டிக்கும் புதிய திட்டத்தை அறிவிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.