

புதுடெல்லி,
கர்நாடகத்தில், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறது.
ஆட்சி அமைக்க இந்த கூட்டணிக்கு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததை எதிர்த்து, அகில பாரத இந்து மகாசபையின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்டது என்றும், இது வாக்காளர்களை மோசடி செய்யும் வகையில் உள்ளது என்றும், எனவே புதிய அரசு அமைக்குமாறு குமாரசாமிக்கு கவர்னர் விடுத்த அழைப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் முன்பு அகில பாரத இந்து மகாசபையின் வக்கீல் நேற்று ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.