காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று இறுதி முடிவு எடுக்கிறது. #SupremeCourt
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
Published on

புதுடெல்லி,

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்ததோடு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை (ஸ்கீம்) 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.

கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்த மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த 8-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வரைவு செயல்திட்டத்தை 14-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்

.அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும் என்று கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த விவகாரத்தின் மீது மேலும் புதிது புதிதாக வழக்குகளை விசாரித்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ பிரிவின் கீழ் செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது சட்டரீதியாக அவசியமாகிறது என்றும் கூறினார்.

அத்துடன் பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் (இன்று) கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. மத்திய அரசின் வரைவு திட்டம் குறித்து தமிழகம் கருத்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று இறுதி முடிவு எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com