பெண்களால் சிலிண்டர் தூக்க முடியாது என வேலை மறுப்பு: ஐ.ஓ.சி.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

சுமித்ராவுக்கு ஒரே தவணையாக ரூ.12 லட்சம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண்களால் சிலிண்டர் தூக்க முடியாது" என வேலை மறுப்பு:  ஐ.ஓ.சி.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரத்தில் தினந்தோறும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை தூக்குவதும், மாற்றுவதும் பெண்கள் தான். அப்படியிருக்க, பெண்களால் கனமான சிலிண்டர்களை தூக்க முடியாது எனக்கூறி வேலை மறுப்பது பெண்மைக்கே இழைக்கப்பட்ட பெரும் அவமானம்" என்று சுப்ரீம் கோர்ட்டு சாடியுள்ளது.

வேலை மறுப்பு

அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஒ.சி.) எல்.பி.ஜி. உருளைகள் நிரப்பும் ஆலையில் 'ரீபில்லிங் ஹெல்ப்பர்' பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், "பெண்களால் கனமான எல்.பி.ஜி. சிலிண்டர்களை தூக்க முடியாது" என்ற காரணத்தை கூறி, அவருக்கு பணி நியமனம் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து சுமித்ரா சட்ட போராட்டத்தில் இறங்கினார். இந்த நீண்டகால வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

நீதிபதிகள் கண்டனம்

அப்போது, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த பாரபட்சமான முடிவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். "பெண்களால் எல்.பி.ஜி. சிலிண்டர்களை தூக்க முடியாது என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்? வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரத்தில், நாள் தோறும் சிலிண்டர்களை தூக்கி மாற்றுவது பெண்கள் தான். பெண் என்ற ஒரே காரணத்துக்காக வேலை மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது" என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

ரூ.12 லட்சம் இழப்பீடு

கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கிய இந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தபோது, சுமித்ரா பணிஓய்வு பெறும் வயதான 63 வயதை கடந்துவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பணி வழங்க முடியாது என்பதால், பணரீதியிலான இழப்பீடு வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று நீதிபதிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சுமித்ராவுக்கு ஒரே தவணையாக ரூ.12 லட்சம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com