உ.பி.யில் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் இடிப்பு; அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் இடிக்கும்படி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.
உ.பி.யில் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் இடிப்பு; அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டுமென கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் இடிக்கும்படி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், கான்பூர் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முகமது ஜாவித் என்பவரின் பிரக்யாராஜ் நகரில் உள்ள வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி வீட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.

உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசு வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடவும், வீடுகளை இடிக்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் ஜமியத் உல்மா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com