

புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, பயங்கரவாதி என கருதப்பட்ட சொராபுதின் ஷேக் உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டர் என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அப்போது குஜராத் உள்துறை மந்திரியாக இருந்த தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி பி.எச்.லோயா 2014-ம் ஆண்டு நாக்பூரில் திடீரென்று மரணம் அடைந்தார்.
நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால், நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இணையதளம் ஹேக்கிங்
நீதிபதி லோயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் கோர்ட்டின் இணையளதம் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 30 நிமிடங்கள் ஆன பின்னர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இணையதளம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இணையதளத்தில் தகவல் இடம்பெற்று உள்ளது. இணையதளம் ஹேக் செய்யப்பட்டதற்கு பின்னால் பிரேசிலை சேர்ந்த ஹேக்கிங் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்ற செய்தியை கோர்ட்டு தகவல்கள் உறுதி செய்து உள்ளது. இதற்கிடையே தொழில்நுட்ப பிரிவு அதனை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக இணையதளம் உள்பட பல்வேறு அரசு இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டது, இதற்கு பின்னால் சீன ஹேக்கர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தேசிய தகவலியல் மையம் தரப்பில் பராமரிக்கப்படும் 10 இணையதளங்கள் வன்பொருள் தோல்வி காரணமாகவே முடங்கியது என தேசிய சைபர் பாதுகாப்பு துறை தலைவர் குல்சான் ராய் குறிப்பிட்டார்.