எதிர்க்கட்சியினரை ‘வானரங்கள்’ என்று விமர்சித்த சுரேஷ் கோபி எம்.பி. - கேரள மந்திரி கடும் கண்டனம்

குற்றச்சாட்டுகளை எழுப்பிய ‘வானரங்கள்’ பதில்களைப் பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம் என சுரேஷ் கோபி கூறியிருந்தார்.
திருவனந்தபுரம்,
பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறி, தேர்தல் ஆணையம் மீதும், மத்திய பா.ஜ.க. அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
இதனிடையே, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எழுப்பிய வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்திய தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பதில் அளிக்கும் என்றும் மத்திய மந்திரியும், திருச்சூர் தொகுதி எம்.பி.யுமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பிய நபர்களை "வானரங்கள்" (குரங்குகள்) என்றும் கோபி குறிப்பிட்டார். மேலும், “குற்றச்சாட்டுகளை எழுப்பிய ‘வானரங்கள்’ பதில்களைப் பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம்” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், சுரேஷ் கோபியின் பேச்சுக்கு கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சுரேஷ் கோபியின் பேச்சு அவமானகரமானது, துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஜனநாயக விரோதமானது. சுரேஷ் கோபி தனது கருத்துக்களை திரும்பப் பெற்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஜனநாயக செயல்முறையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கு வாக்காளர் பட்டியல்கள் குறித்த புகார்கள் அவசியம். அத்தகைய புகார்களை அளிப்பவர்களை கேலி செய்வதும், சித்தரிப்பதும் ஜனநாயகத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.






