

கவுகாத்தி,
அசாம் மாநில போலீசார், இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்களை மோடி அரசு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், இன்று கூட நான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த ஆதாரங்களை கேட்கிறேன். இந்திய அரசாங்கம் அதனை வெளியிட வேண்டும் என்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்டது சரியானது தான் எனும் பொருள்படி பேசினார்.
இதனையடுத்து, தெலுங்கானா முதல் மந்திரி துரோகியை போல் பேசுகிறார் என்று சந்திரசேகர ராவின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
மேலும், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளையில், ஜம்மு காஷ்மீர் லெப்டினண்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, சந்திரசேகர ராவை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்தின் துணிச்சலை குறித்து யாருக்கும் ஒரு அவுன்சு அளவுக்கு கூட சந்தேகமில்லை. நாட்டை பற்றியும் ராணுவத்தை பற்றியும் நல்ல முறையில் சிந்திக்க இது போன்ற மக்களுக்கு கடவுள் நல்ல அறிவை அளிக்கட்டும் என்று கூறியுள்ளார்.