சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை

சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி தந்தையிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்தினர்.
சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
Published on

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். 34 வயது இளம் நடிகரான அவரது மரணம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது28) மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்பை சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, கணக்காளர் ராஜத் மேவதி, மேலாளர் சாமுவேல் மிரந்தா, சமையல்காரர் நீரஜ் சிங், வீட்டு வேலைக்காரர் கேசவ் ஆகியோரிடம் அவர்கள் பல முறை விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நடிகை ரியாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினர். 4 நாட்களாக ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டது. கடந்த 4 நாட்களில் நடிகை ரியாவிடம் சுமார் 36 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் தந்தை இந்திரஜித்திடம் சிபிஐ இன்றும் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக நேற்று 9 மணி நேரம் இந்திரஜித்திடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மகள் ரியாவும் சுஷாந்த் சிங்கும் இனைந்து மேற்கொண்ட நிதி பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com