

புதிய தலைமை தேர்தல் கமிஷனர்
நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் சுனில் அரோரா. இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து 24-வது தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா (வயது 63) நியமிக்கப்பட்டார். அவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், 1980-ம் ஆண்டின் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் தொகுப்பை சேர்ந்தவரும் ஆவார். இவர் வருமான வரித்துறையில் 39 ஆண்டு காலம் பணியாற்றி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக, 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு, அந்தப் பதவியை வகித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் நடத்துவார்
கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இப்போது இவர் தலைமை தேர்தல் கமிஷனர் ஆகி உள்ளார்.நேற்று இவர் தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார்.இவரது பதவிக்காலம், அடுத்து ஆண்டு மே 14-ந் தேதி முடிவுக்கு வருகிறது.இவரது தலைமையில் தேர்தல் கமிஷன், அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.