

புதுடெல்லி,
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார். 38 வயதான அவர், ஒலிம்பிக் பந்தயத்தில் 2 தடவை பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 4-ந் தேதி, டெல்லியில் உள்ள சாத்ரசால் விளையாட்டு மைதானத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் மல்யுத்த வீரர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், சுஷில்குமார் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களால் தாக்கப்பட்ட சாகர் ராணா (வயது 23) என்ற மல்யுத்த வீரர் உயிரிழந்தார்.
அவருடைய நண்பர்களான சோனு, அமித்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த கொலையை தொடர்ந்து, சுஷில்குமார் தலைமறைவானார். அவர் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளும், ஆயுத சட்ட வழக்குகளும் பதிவு செய்தனர்.
சுஷில்குமாரை டெல்லி போலீசார் தேடி வந்தனர். அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான நோட்டீசும் வெளியிடப்பட்டது. ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
சுஷில்குமாரை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் டெல்லி போலீசார் அறிவித்தனர்.
சுஷில்குமார், முன்ஜாமீன் கோரி டெல்லி ரோகிணி கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சுஷில்குமார்தான் முக்கிய சதிகாரர் என்பதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.
இந்தநிலையில், சுஷில்குமார் நேற்று டெல்லி போலீசாரிடம் பிடிபட்டார். டெல்லி புறநகரில் உள்ள முண்ட்கா என்ற இடத்தில் வைத்து அவரை கைது செய்ததாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பி.எஸ்.குஷ்வா தெரிவித்தார்.
சுஷில்குமாருடன் அவருடைய கூட்டாளி அஜய் என்ற சுனில் (வயது 48) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இருவரும் யாரையோ சந்திக்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.