சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் அஞ்சலி

சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் அஞ்சலி
Published on

புதுடெல்லி

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67.

டெல்லி ஜன்பத் பகுதியில் வசித்து வந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி சற்றுநேரத்தில் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனையில் திரண்டனர். நள்ளிரவில் அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஷ்மா வீட்டருகே உள்ள ஜந்தர் மந்தரில் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக சுஷ்மா உடல் வைக்கப்படும். அதன்பிறகு பா.ஜ.க. தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள். பிற்பகல் 3 மணியளவில் லோதிரோடு மின்மயானத்தில் சுஷ்மாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பொதுவாழ்வில் கண்ணியம், நேர்மை, தைரியத்துடன் விளங்கியவர் என்றும், எப்போதும் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டு, தலைசிறந்த நிர்வாகியாகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தார் என்றும், அவரது மறைவின் மூலம் இந்திய அரசியலின் புகழ்மிக்க ஒரு அத்தியாயம் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுஷ்மாவின் மறைவு தமக்கு தனிப்பட்ட இழப்பு என்றும் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி செலுத்தினார்கள் சுஷ்மா சுவராஜின் உறவினர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்

முன்னாள் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்

நாட்டின் மிகச்சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என சுஷ்மா மறைவிற்கு எல்.கே அத்வானி இரங்கல் தெரிவித்து உள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு திமுக, மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சார்பில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மதிமுக சார்பில் ஈரோடு கணேசமூர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா ஸ்வராஜை இழந்துவாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ள இரங்கலில் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, அவர் தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பேரிழப்பாகும். சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்

இந்திய அரசாங்கம் நல்ல ஒரு தலைவியை இழந்துள்ளது, அதேபோல் இலங்கை அரசாங்கம் நல்ல ஒரு நண்பியை இழந்துள்ளது என சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இரங்கல் தெரிவித்து உள்ளார். இலங்கை அமைச்சர்கள் வேலுசாமி ராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com