நாக்கால் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை:பா.ஜனதா தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாக்கால் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை:பா.ஜனதா தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
Published on

ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் சீமா பத்ரா அவர் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தனது வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர்.

பின்னர், டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலை செய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார். வத்சலா டெல்லியில் இருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமாவின் வீட்டில் பணிபுரிந்தார். இந்நிலையில், சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கி உள்ளார். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதை பற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே போலீசார் சீமாவின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை ஆகஸ்ட் 22 அன்று மீட்டனர். பாஜக தலைவரின் அசோக் நகர் இல்லத்தில் இருந்து ராஞ்சி போலீசார் அவரை மீட்டனர். சீமாவின் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை சுனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அங்கு தனது பற்களை இரும்பு கம்பியால் உடைத்ததாகவும், சூடான பாத்திரங்களால் உடம்பில் எரித்ததாகவும், சிறுநீரை நக்க வைத்தனர், தன் நாக்கைப் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார்.

எனக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை தன் தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன் என கூறினார்.

இந்த நிலையில் தனது வீட்டுப் பணியாளரை கொடூரமாக தாக்கிய ஜார்க்கண்ட் பா.ஜனதா தலைவர் சீமா பத்ரா இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஜார்கண்ட் மாநில பா.ஜனதா தலைவர் குணால் சாரங்கி கூறியதாவது:-

இதுபோன்ற செயலகள் மற்றும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் நிச்சயமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.இன்று கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். யாராக இருந்தாலும், நமது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களைச் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நடத்தையை பா.ஜனதா பொருத்து கொள்ளாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com