15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: "ஜனநாயகத்துக்கு எதிரானது" - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் சர்வாதிகாரத்தின் கொடூர தன்மையை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவையில் இருந்து திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் இருந்து ஒருவரும் என மொத்தம் 15 எம்.பி.க்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரியதற்காக 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது; அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?

பாதுகாப்புக் குளறுபடி குறித்து விவாதம் நடத்தக் கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவை அவையில் விளக்கமளிக்க வலியுறுத்தியது குற்றமா..?; ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா..?;

இந்த நடவடிக்கை தற்போதைய காலகட்டத்தின் ஒரு அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையை காட்டவில்லையா..?" என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com