ஏடிஜிபி ஜெயராம் மீதான கைது உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு


ஏடிஜிபி ஜெயராம் மீதான கைது உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 19 Jun 2025 11:46 AM IST (Updated: 19 Jun 2025 12:47 PM IST)
t-max-icont-min-icon

ஏடிஜிபி ஜெயராம் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

புதுடெல்லி,

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ஜெயராம் சார்பில் வக்கீல் ஆதித்யசவுத்திரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் (சிறுவன் கடத்தல்) ஏ.டி.ஜி.பி.யாக உள்ள மனுதாரருக்கு தொடர்பு இல்லை. முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜெயராமுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்டு, 17-ந் தேதி மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

இத்துடன் மனுதாரர் ஏ.டி.ஜி.பி. பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். உடனே தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மிஷா ரோத்தகி, 'மனுதாரரை கைது செய்யவில்லை. காவல்துறை புலன் விசாரணையில் பங்கேற்றார். விசாரணையில் பங்கேற்க செய்வதில் அக்கறை செலுத்தினோம்' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'ஜெயராமின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியுமா?, இல்லையா?' என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, விசாரணையை இன்றைக்கு (அதாவது வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதன் ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், "ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை் தற்போதைய நிலையில் திரும்பப்பெறப் போவதில்லை. வழக்கு விசாரணை நடைபெறுவதால் இடைநீக்கம் தொடர வேண்டும். வழக்கில் ஜெயராமுக்கு தொடர்பிருப்பதாக கருதுவதால் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை உயர்நீதிமன்றத்தில் வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட இருக்கிறோம். ஜெயராம் வழக்கை தமிழக அரசின் ஏதேனும் சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சற்று நேரத்துக்கு தள்ளி வைத்தனர்.

அதனை தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் மீதான கைது உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

1 More update

Next Story