மனைவி மீது சந்தேகம்... இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை - உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

மகள்களை கொலை செய்த சசி ரஞ்சன், அவராகவே காவல்துறையை தொடர்பு கொண்டு கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவி மீது சந்தேகம்... இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை - உத்தர பிரதேசத்தில் பயங்கரம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா(வயது 48). இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ரித்தி மற்றும் சித்தி என்ற இரட்டை பெண் குழந்தைகளும் இருந்தனர்.

இதனிடையே சசி ரஞ்சன், தனது மனைவி ரேஷ்மாவுக்கு மற்றொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்டார். இதனால் அவர் ரேஷ்மாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், வீட்டிற்குள்ளேயே சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி சசி ரஞ்சன் தனது மனைவியை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

மேலும் ரேஷ்மாவிடம், ‘நீ மகனுடன் பிரிந்து சென்றுவிடு, மகள்களை நான் வளர்த்துக் கொள்கிறேன்’ என்றும் சசி ரஞ்சன் கூறியுள்ளார். அதே சமயம், சசி ரஞ்சன் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தனது மகள்களின் அறைக்கு கூட தன்னை செல்ல அனுமதிப்பதில்லை என்றும் ரேஷ்மா தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது மகள்களுடன் தனி அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சசி ரஞ்சன், அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது 2 மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரே காவல்துறையை தொடர்பு கொண்டு, மகள்களை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 2 பெண் குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சசி ரஞ்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com