நடத்தையில் சந்தேகம்... இளம்பெண்ணை நாற்காலியில் கட்டிவைத்து உயிருடன் எரித்த கணவன் - உ.பி.யில் பரபரப்பு

மனைவியை தீவைத்து கொளுத்திய சுக்பீர் சிங் தனது 2 குழந்தைகளுடன் தப்பியோடினார்.
நடத்தையில் சந்தேகம்... இளம்பெண்ணை நாற்காலியில் கட்டிவைத்து உயிருடன் எரித்த கணவன் - உ.பி.யில் பரபரப்பு
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்பீர் சிங். இவரது மனைவி சோனம். இந்த தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு 7 வயது மகனும், 5 வயது மகளும் உள்ளனர்.

சந்தேகம்

சுக்பீர் சிங் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சோனம், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞருடன் நெருக்கமாக பழகி வருவதைப் பார்த்து, அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக சுக்பீர் சிங் சந்தேகித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோனம் அந்த கிராமத்து இளைஞருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தை சுக்பீர் சிங் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தீவைப்பு

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சுக்பீர் சிங் தனது மனைவியை நாற்காலியில் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார். இதனால் சோனம் அலறித் துடித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதற்குள் வீடு முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கியது.

தப்பியோடிய கணவன்

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சுக்பீர் சிங் தனது 2 குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பியோடினார். அவரது மனைவி சோனம் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.

போலீசார் அவரது எரிந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் தப்பியோடிய சுக்பீர் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X