

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைதான ஸ்வப்னா சுரேஷ் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஸ்வப்னா சுரேசின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் அரசு பணியில் சேர சமர்ப்பித்த போலி டிகிரி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது பஞ்சாபில் உள்ள ஒரு நிறுவனம் என்பது தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம் தைக்காட்டில் செயல்பட்டு வந்த ஒரு தொலைதூர கல்வி ஆலோசனை மையம் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி போலி சான்றிதழ் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து போலி சான்றிதழ் வழங்கிய நிறுவன உரிமையாளர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.