கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரையும், அவரது நண்பரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில், கேரள ஐகோர்ட்டில் ஆன்லைன் மூலம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த ஸ்வப்னா சுரேஷ் தனக்கும், தங்கம் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனவும், தனக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) எடுக்கப்போவதால், உயர் நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்து வந்த ஸ்வப்னா சுரேஷை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது, பெங்களூருவில் ஸ்வப்னா கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com